முதல் ரீலிலேயே மூக்குல 'பஞ்ச்' விடுற படங்களாக பார்த்து பஞ்ச்சராகி போன ரசிகர்கள் சார்பில் ஒரு நன்றிங்ணா... தென்றலாக ஆரம்பிச்சு புயலாக முடியுது படம்!இடையிடையே வயிறு வலிக்கிற நகைச்சுவையும், மனசு வலிக்கிற சென்ட்டிமென்டும் குழைந்த நேர்த்தியான கட்டுமானம்! புது டைரக்டராம். இதே ரூட்ல போங்க தலைவா...காதல்னாலே கறிக்கடைய பார்க்கிற மாதிரி உவ்வே...ங்கிறாரு நகுல். இவருக்கு நேர் எதிர் பூர்ணா. மன்மதன் கோவிலில் மந்திரிச்சு விட்ட மாதிரி, ஊரு காதலையெல்லாம் ஒண்ணு சேர்க்கிற கேரக்டர். இவங்க ரெண்டு பேருக்கும் லவ் வருதுங்கறதுதான் முதல் பாதி. இரண்டாம் பாதியில் நினைத்தே பார்க்க முடியாத ஒரு வில்லன். அவனை முறியடிச்சு, பூரணாவை கரம் பிடிக்கறதுக்குள்ளே வேட்டைக்காரனின் ஒரு ரீலை இந்த படத்திலே சேர்த்திட்டாங்களோங்கிற அச்சத்தை ஏற்படுத்தி வணக்கம் போடுறாங்க. கிடைக்கிற இடத்திலே எல்லாம் டைரக்டர் சொருவியிருக்கிற 'ட்விஸ்ட்' இருக்கே, விரலே இல்லாதவன் கூட விசிலடிச்சு ரசிப்பான்!
'அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் நம்பர் 109' ங்கிற மாதிரி, நகுலுக்கு போன் அடிச்சு "மச்சான், என் தங்கச்சி ஒருத்தனை காதலிக்கிறா. வந்து பிரிச்சு வையி"ன்னு போன் அடிக்கிறார்கள். அவரும் வந்த வேகத்தில் சில பல யுக்திகளை கையாண்டு ஜோடிகளை பிரிச்சு வைக்கிறார். இதற்காக அவர் கையாளும் காரணங்கள் மொக்கைதான். இருந்தாலும், சக்கையா கைதட்டுது தியேட்டர். இதில் சந்தானத்தின் பங்கு செம ஜாலி...
நடிகர் கார்த்திக்கின் மேனரிசத்தை அப்படியே 'அடித்திருக்கிறார்' நகுல். யாராவது அந்த இடத்தை நிரப்ப வரமாட்டாங்களா என்ற ஏக்கம் தீர்ந்து போகிறது இவரை பார்க்கும் போதெல்லாம். ஆம்பிளை ஜோதிகாவாக அடிக்கொரு தரம் அவர் காட்டும் மேனரிசங்கள் அழகோ அழகு! "இன்னும் மூணு நாள் இங்கதான் இருப்பேன். முடிஞ்சா தடுத்துக்கோ" என்று வில்லனிடம் சவால் விட்டு, அந்த மூணு நாள் புரோகிராமையும் அவரிடம் சொல்லும் போது அடிவயிறு கலங்கிதான் போகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வேப்பிலை அடித்து வில்லனை பேயாட விடுகிறாரே, கலக்கல்ம்மா! டிபுள் மீனிங்காக இருந்தாலும், 'வார்னிங்' கொடுக்க மனசில்லை சந்தானத்தின் காமெடிக்கு. கனவில் வரும் காதலியிடம் இவர் ஐ லவ் யூ சொல்ல முயல்வதும், அதை நகுல் நுழைந்து கெடுப்பதும், திடுதிடுக்கிற காமெடி. கதை நாகர்கோவிலுக்கு நகரும்போது சந்தானம் இல்லாமல் போனாரே என்ற வருத்தமே வந்து தொலைக்கிறது.
பூரணாவுக்கு அழகும், நடிப்பும் வரமாகவே வாய்த்திருக்கிறது. காதலர்களை சேர்த்து வைக்க தெரு முழுக்க ஓடித்திரிவதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? அதிலும் இந்த முயல் குட்டியை விரட்டிக்கொண்டு சுமோ வகையறாக்கள் வேறு...?! .வில்லன் சம்பத், எல்லா வில்லன்களை போலவும் 'பைல்ஸ்' தொல்லையால் அலறுகிறார். அவரது கைத்தடியாக வருகிற பி.ஏ சில காட்சிகளே வந்தாலும், கலகலப்பு மூட்டுகிறார். ஒருதலைக்காதலால் இறந்து போகிற மகனுக்காக அவன் காதலித்த பெண் கடைசி வரை சிரிக்கவே கூடாது என்று கட்டளையிடும் வில்லன் தமிழ்சினிமாவுக்கே புதுசு.
இசை-தினா. சில பாடல்கள் ஆறுதல். பல பாடல்கள் பிளேஸ்மெண்ட் தவறி இடம் பெறுவதால், எரிச்சல்! பின்னணி இசை என்ற பெயரில் இவர் உருட்டும் தகர டப்பாக்கள் தனி தலைவலி!
'கலவர'க்கோட்டையாகவே மாறி வரும் தமிழ்சினிமாவில், 'கந்தக்கோட்டை'யை கைகூப்பி வணங்கவே செய்யலாம்!
0 comments:
Post a Comment