"ரொம்ப சந்தோஷமான நிகழ்ச்சி இந்த விழாவில் நடந்தது. எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து ஒரு பரிசை கலைஞருக்கு கொடுத்து இருக்க மாட்டார்கள்.
சிவாஜி - தி பாஸ் படத்துக்காக 2007ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ரஜினி தனது ஏற்புரையில் கூறியதாவது-
"ரொம்ப சந்தோஷமான நிகழ்ச்சி இந்த விழாவில் நடந்தது. எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து ஒரு பரிசை கலைஞருக்கு கொடுத்து இருக்க மாட்டார்கள். அந்த வாய்ப்பு எனக்கும், கமலுக்கும் கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம். 'உடல் நலக்குறைவாக இருந்ததால், கொஞ்சம் தூங்கி விட்டேன். சற்று தாமதமாக விழாவுக்கு வருகிறேன்' என்று எங்களிடம் கலைஞர் சொன்னார். அந்த பண்பு, அடக்கத்தை எப்படி சொல்வது?. அய்யா நீங்க நல்லாயிருக்கணும். கலைஞர் எத்தனை மேடுகள், சிகரங்களைப் பார்த்தவர்.. எத்தனையோ மேடுகளும், சிகரங்களும் காணாமல் போனதையும் பார்த்திருக்கிறார். அவர் யாரை அணைத்துக் கொண்டாலும் அவர் பெரிய ஆளாகி விடுவார். அதேபோல் அவர் யாரை தள்ளினாலும் பெரிய ஆளாகி விடுவார்கள். இல்லையென்றால், சாய் பாபா அவருடைய வீட்டுக்கு வந்திருக்க மாட்டார்.
'சிவாஜி' படத்துக்காக, கலைஞர் கையினால் பரிசு பெற்றது, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த படத்தை தயாரித்த ஏவி.எம்.சரவணனுக்கு என் மனமார்ந்த நன்றி. படத்தை இயக்கிய ஷங்கருக்கு என் மனமார்ந்த நன்றி. நான் திரையுலகுக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. கதாநாயகன் ஆகி 32 வருடங்கள் ஆச்சு. என்னை கதாநாயகனாக போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டர்களுக்கும், என்னை ஏற்றுக்கொண்டு என் படங்களை ரசித்த ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..." என்றார் ரஜினி.
தசாவதாரம் படத்துக்காக 2008-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற கமல்ஹாசன் கூறியதாவது-
"இந்த ஏற்புரையை நான் சொல்வேன் என எதிர்பார்க்கவில்லை. எதுவும் தெரியாமல் இங்கு வந்தேன். நான் பிறப்பதற்கு முன்னால் எழுதிய வசனங்களை இங்கு சொல்லலாம் என்று வந்தேன். கலைஞர் எழுதிய வசனங்களை நடிகர் திலகம் சிவாஜியிடம் நான் பேசிக் காட்டி இருக்கிறேன். ஒருமுறை கூட கலைஞர் முன்பு பேசிக் காட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று இங்கே வடிவேல் படித்த வாழ்த்து பாடலில், கலைஞர் நடந்து சென்ற பாதையில் ஏற்படும் புழுதியில் புரள்வேன் என்று ஒரு வரி இருந்தது. கலைஞர் நடந்து சென்று கிளப்பிய புழுதியில் நனைந்தவர்கள், நாங்கள். ஒரு தலைமுறையை தாண்டி கூட, இன்னும் அந்த புழுதியில் குளித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த விழா சரித்திரத்தில் இடம்பெறும். எங்கள் கையினால் உங்களுக்கு விருது வழங்கியதை எங்கள் பேரக் குழந்தைகளிடம் கூட பெருமையோடு சொல்லிக் கொள்வோம். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்வதா, வாழ்த்துவதா என்று புரியவில்லை. எனக்கும், ரஜினிக்கும் இடையே பொறாமை இல்லை. நாங்கள் பொறாமைப்பட்டது, குஷ்பு தமிழில் பேசியதை பார்த்துதான். கலைஞர் என் பக்கம் திரும்பி, குஷ்பு தமிழில் பேசுவதை பார்த்தாயா? என்று கேட்டார். அந்த அளவுக்கு குஷ்பு தமிழில் பேசி, தனி விருதை தட்டிக்கொண்டு போய்விட்டார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
கலைஞர் உடல் நலக்குறைவு காரணமாக விழாவுக்கு தாமதமாக வருவதாகக் கூறினார். அவர் எங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி சொன்னது, அவருடைய பண்பு. அந்த பண்பை கண்டு நாங்கள் வியந்தோம். இன்னும் அவரிடம் பாடம் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த விழாவை வேகமாக நடத்தி முடிக்க வேண்டியது எங்கள் கடமை. விழாவில் கலந்துகொண்டு விருது வழங்கியதை அவர் கடமை என்று நினைத்து செய்யவில்லை. உரிமை என்று நினைத்து செய்தார். இது, சரித்திரத்தில் இடம்பெறும். இந்த விழாவில் நானும் பங்கு பெற நேர்ந்ததற்காக நன்றி.
ரஜினிக்கு என் வாழ்த்துக்கள். அவர் (எந்திரன்) படத்தை சீக்கிரமே முடித்து வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்..." என்றார் கமல்.
0 comments:
Post a Comment