அஜீத் ரசிகர்கள் சிலர் தங்கள் ஆர்வத்தில் அசல் திருவிழா என்னும் பெயரில் 100 மன்றங்கள் திறக்கப் போவதாக அறிவிக்க, இவர்கள் செய்வது மன்ற கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அறிவித்துள்ளார் அஜீத் ரசிகர்களின் தலைமை மன்ற நிர்வாகி சுரேஷ் சந்திரா.
இதுகுறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 20ம் தேதி மதுரையில் அசல் திருவிழா என்ற பெயரில் தலைவராலும் தலைமை இயக்கத்தாலும் அங்கீகரிக்கப்படாத ஒரு விழா நடைபெற இருப்பதாக விளம்பரங்கள் வந்தபடியே உள்ளது.
நமது இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் அல்லாத ஓரிருவர் தங்கள் சுயலாபத்திற்காகவும் முழுக்க முழுக்க தங்களை வளர்த்துக்கொள்ளவும் எண்ணற்ற நம் தலைவரின் ரசிகர்களை நூறு மன்றம் திறக்கிறோம். இதற்கு நம் தலைவரின் ஆசி உண்டு என்று கூறி ரசிகர்களை திசை திருப்புவதாகும். நம் தலைமை இயக்கத்திற்கு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
நமது இயக்கத்தின் அடிப்படையே ஒற்றுமையுணர்வே என்பதை உணராமல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கும் விருப்பு வெறுப்புக்கும் உட்பட்டு தலைமை இத்தகைய விழா நடத்த வேண்டாம் என்று கேட்டு கொண்ட பிறகும் தங்கள் சுய லாபத்திற்காக ரசிகர்களை பிரிப்பவர்களை தலைமை வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வோருக்கும் இந்த 100 மன்றம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் இயக்கங்களுக்கும் தலைமை எக்காலத்திலும் அங்கீகரிக்காது என்பதையும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
தலைமை இயக்கத்திற்கு முன் கட்டுப்பாட்டில் வரும் மாவட்ட இயக்கங்களின் வாயிலாகத்தான் புதிய இயக்கங்களுக்கு பதிவு எண் வழங்கப்படும் என்பதையும் இயக்கத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் வாயிலாக எந்த ஒரு அங்கீகாரமும கிடைக்காது என்பதையும் அறிக.
வருகிற ஜனவரி மாதம் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடை பெறும் போது மதுரை நகர் பகுதி, கிளை நிர்வாகிகளை தலைமை நிர்வாகி நேரில் சந்திப்பார் என்பதையும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
குறைகள் இருப்பின் அதனை தலைமையிடம் முறையாக தெரிவித்து கால அவகாசம் கொடுக்காமல் சுயலாபத்திற்காக அப்பாவி ரசிகர்களை அலைகழிக்கும் அந்த சுய நல கூட்டத்தை தலைமை வன்மையாக கண்டிக்கிறது..." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மதுரை அஜீத் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அசல் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள பக்ருதீன் என்பவர் தெரிவித்தார்.
அவர் நம்மிடம் கூறுகையில், "இந்த விழாவுக்கு முறையாக நான் அனுமதி பெற்றுள்ளேன். 3 லட்சம் ரூபாய் வரை கைக்காசை செலவழித்து ஏற்பாடுகள் செய்த நிலையில் சுரேஷ் சந்திரா இப்படி அறிக்கை விட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
நான் பிரபல நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். எனக்கு ரசிகர்களை ஏய்த்துப் பிழைக்கும் வேலை தேவையில்லை. என்னை நம்பி ஒரு கூட்டமே இருக்கிறது. இந்த 100 மன்றங்கள் மூலம் 6000 ரசிகர்கள் புதிதாக அஜீத் மன்றத்தில் உறுப்பினராக காத்திருந்தார்கள். அஜீத் மீதுள்ள உண்மையான பாசத்தில் நான் இதையெல்லாம் செய்தால், என்னைப் போய் பணம் வசூல் செய்பவன் என்று அசிங்கப்படுத்துகிறார்கள்.
இப்போது நான் தலைமை மன்றத்திடம் கேட்டால், விரைவில் இந்த அறிக்கைக்கு பதில் அறிக்கை தருவேன். அதுவரை பொறுத்திரு என்கிறார். என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. இப்படிப்ப்டட குழப்பங்களால் பல ரசிகர்களை இழக்கிறார் அஜீத் என்பதுதான் உண்மை" என்றார்.
0 comments:
Post a Comment